சிவகார்த்திக்கேயனுக்கு பின்னணி பாடும் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சீமராஜா படத்தில், சூப்பர் சிங்கர் 6 பட்டம் வென்ற செந்தில் கணேஷ் பின்னணிப் பாடகராகஅறிமுகமாகிறார்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘சீம ராஜா’. சிவ கார்த்திக்கேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ள இந்தப் படத்தில், சிம்ரன் வில்லியாகவும், நெப்போலியன் தந்தையாகவும், சூரி,மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும், கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் 6 பட்டம் வென்ற செந்தில் கணேஷ் சீமராஜா பின்னணிப் பாடகராக அறிமுகமாகிறார். விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் 6 சீசன் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. பெரும்பாலும் திரையிசை பாடல் பாடக்கூடியவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தனர்.

இந்த சீசனில் முதன்முறையாக நாட்டுப்புற கலைஞர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலெட்சுமி போட்டியாளர்களாக இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது முதலே பலத்த வரவேற்பு இருந்து வந்தது. குறிப்பாக இவர்கள் பாடிய பாடல்கள் மக்கள் இசையை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றன. நெசவாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரின் வாழ்க்கையை எடுத்து பாடலாக பாடியது அனைவரையும் கவர்ந்தது.

விஜய் டிவியில் கடந்த 15ம் தேதி ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், மாளவிகா, அனிருத், ஸ்ரீகாந்த், ரக்‌ஷிதா, ஷக்தி மற்றும் செந்தில் கணேஷ் ஆகியோர் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர். இவர்களில் மக்கள் இசைக் கலைஞரும், நாட்டுப்புற பாடகருமான செந்தில் கணேஷ் சூப்பர் சிங்கர் 6 பட்டத்தை தட்டிச் சென்றார்.

எல்லா சூப்பர் சிங்கர் சீசனிலும், வெற்றிபெறும் போட்டியாளர் ஒரு பிரபல இசையமைப்பாளரின் இசையில் பாடுவதற்கான வாய்ப்பை விஜய் டிவி ஏற்படுத்தி கொடுக்கிறது. அந்த வகையில் சீசன் 6ல் வெற்றிபெறுபவர் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடுவார் என உறுதியளிக்கப்பட்டது.

இதனையடுத்து வெற்றிபெற்ற செந்தில்கணேஷ் ஏ.ஆர்.ரகுமானுடன் எந்த படத்தில் பாடப் போகிறார் என்று எதிர்பார்ப்புடன் இருக்கும்போது, இசையமைப்பாளர் டி.இமானிடம் இருந்து அதிரடி அறிவிப்பு வந்துள்ளது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவக்கார்த்திகேயன் சமந்தா நடிக்கும் சீமராஜா திரைப்படத்தில் அட்டகாசமான ஒரு கிராமிய பாடலை செந்தில்கணேஷை பாட வைக்க போகிறார் என்பதை மகிழ்ச்சி பொங்க டி.இமான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நாட்டுப்புற பாடல் என்றால் இமான் இசையில் புகுந்து விளையாடுவார். அதுவும் சிவா என்று வரும்போது அது தனி ரகமாக இருக்கும். சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடலை விஜய் டிவி நிகழ்சியில் அவரின் முன்பே பாடி கலக்கினார் செந்தில். இப்போது சிவகார்த்திகேயனுக்கே பாடும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாட்டு நிச்சயமாகிவிட்டது. இப்போது டி.இமான் அடுத்த வாய்ப்பையும் வழங்கிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here