டிக் டிக் டிக் விமர்சனம் – இந்தியாவில் முதல் விண்வெளி படம்

ஸ்பேஸ் த்ரில்லர் படத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், அர்ஜுனன் நந்தகுமார், ஜெயப்பிரகாஷ், ரித்திகா ஸ்ரீநிவாஸ், ஆரவ் ரவி நடித்துள்ளனர். சக்தி சௌந்தர் ராஜன் எழுத்து இயக்கம். தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜாபக் இசை டி.இமான்

சென்னை: சென்னையை தாக்க வரும் ராட்சத விண்கல்லை ரகசியமாக அழிக்க இராணுவ விண்வெளி பாதுகாப்பு மையம் தொடங்கும் மிஷன்தான் படத்தின் ஒன் லைன்.

சென்னை எண்ணூரில் வந்து விழுகிறது ஒரு விண்கல். அதிர்ச்சியாகி நிற்பதற்குள், 60 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதும் அதைத் தடுக்க ஒரு வாரமே கெடு எனவும் தெரிகிறது. அந்த விண்கல் விழுந்தால் தமிழ்நாட்டின் வரைபடமே மாறும் அளவுக்கு பாதிப்பு, பல கோடி உயிரிழப்பு ஏற்படும். இதைத் தடுக்க விண்வெளியிலேயே அந்த விண்கல்லை வெடிக்க செய்ய வேண்டும்.

இந்த மிஷனை ரகசியமாக முடிக்க ஒரு குழுவைத் தயார் செய்கிறது இராணுவ விண்வெளி பாதுகாப்பு மையம். அதிகாரிகள் ஸ்வாதி வின்சென்ட் அசோகன் மற்றும் ஹைடெக் திருட்டுக் குழு வாசு, வெங்கட் , அப்பு ஆகியோர் விண்வெளிக்கு செல்கிறார்கள். விண்கல்லைத் தடுத்தார்களா? எப்படி என்பதை சொல்கிறது படம்.

விண்கல்லை சிதறடிக்க வேண்டுமானால் அதற்கு அதிகபட்ச அணுசக்தி வேண்டும். பூமியில் உள்ள எந்த நாட்டிடமும் அவ்வளவு அணுசக்தி இல்லை. ஆனால் சீனா, அந்த அணுசக்தியை விண்வெளியில் மறைத்து வைத்துள்ளது. அந்த அணுசக்தியை திருடி, விண்கல்லை சிதறடிக்க வேண்டும் அதுவும் ஏழே நாட்களில் என்ற இலக்குடன் கிளம்புகிறது ஜெயம் ரவி டீம். இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா என்பதே இந்த படத்தின் மீதிக்கதை

இந்தியாவின் முதல் விண்வெளி படம் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் தியேட்டருக்குள் நுழைகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருக்கிறாரா என்பதை சக்தி சௌந்தரராஜன்தான் சொல்ல வேண்டும். பேங்க் ராபரி, ஸோம்பி என வித விதமான ஜானர்களுடன் களம் இறங்கும் சக்தி சௌந்தர் ராஜன் இந்த முறை ஸ்பேஸ் ஃபிலிம் ஜானரை கையில் எடுத்திருக்கிறார்.

விண்கல், தந்தை – மகன் பாசம், திருட்டு, இடையில் திருப்பம் என ஸ்பேஸ் த்ரில்லருக்கான அத்தனை சாத்தியங்களுமே படத்துக்குள் இருக்கிறது. ஆனால், அதை எல்லாம் வைத்து எந்த அழுத்தமும் இல்லாமல் கதை நகர்த்தியிருப்பது படத்தின் மிகப் பெரிய மைனஸ். லாஜிக் ஓட்டைகள் அதிகம் உள்ளதால் படம் சுவாரஸ்யம் குறைகிறது.

தமிழில் இப்படியெல்லாம் படம் வருமா? என்று நினைக்க, அதை கொண்டு வந்த சக்தி சௌந்தராஜனுக்கு பாராட்டுக்கள்.
படத்தின் முதல் பாதி வேகமாக செல்கின்றது. இரண்டாம் பாதியில் சீனா விண்வெளி வீரர்களிடம் இருந்து அணு ஆயுதத்தை திருடி விட்டு வெளியே விண்வெளியில் ரவி மிதக்கும் காட்சி, ஹாலிவுட் தரம்.

இரண்டே பாடல்கள், காட்சி தகுந்தாற்போல் பின்னணி இசை, கதையில் இல்லாத பதற்றத்தை இசை மூலம் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இமான். அந்த இசை படத்தைக் கொஞ்சம் துடிப்புடன் வைத்திருக்க உதவுகிறது. வெங்கடேஷ் ஒளிப்பதிவு விண்வெளியின் மிதப்பை ஆடியன்ஸுக்கு கொடுக்க முயற்சிக்கிறது.

ஏவுதள அலுவலகம், விண்களம், உடைகள், பொருட்கள் என படத்தை உயிர்ப்பிக்க உழைத்திருக்கிறது ஆடைவடிவமைப்பாளர் தனபால் மற்றும் கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி டீம். படத்தை ஓரளவு சுறுசுறுப்பாக நகர்த்துவது பிரதீப் ராகவின் படத்தொகுப்புதான். எது தேவை, எவ்வளவு சுருக்கமாக இருக்கவேண்டும் என கவனமாக உழைத்திருக்கிறார்.

மொத்தத்தில் ஹாலிவுட் தரத்தில் ஒரு விண்வெளி படம் எடுக்க முயற்சித்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து லாஜிக் மீறலை கண்டுகொள்ளாமல் பார்த்தால் இந்த படத்தை ரசிக்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here