காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது!

டெல்லி: ஜூன் 1ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த 1ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது.பிரதமர் மோடி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்தித்துப் பேசினார். பின்னர் குமாரசாமி செய்தியாளர்களிடம் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதாகச் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் ஒன்பது பேரை உறுப்பினர்களாகக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு நேற்று (ஜூன் 22) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆறு பகுதி நேர உறுப்பினர்களும், இரண்டு முழுநேர உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகம் உறுப்பினரைப் பரிந்துரை  செய்யாத நிலையில், கர்நாடக அரசின் நீர்வளத் துறை நிர்வாகச் செயலாளரை தற்காலிக உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது. ஆணையம் டெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உறுப்பினர்களாகத் தமிழக நீர்வளத் துறையின் திருச்சி தலைமைப் பொறியாளர் செந்தில்குமார், கோவை தலைமைப் பொறியாளர் கிருஷ்ணன் உன்னி, புதுச்சேரி பொதுப்பணித் துறை முதன்மைப் பொறியாளர் சண்முகசுந்தரம், கேரள
பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் கே.ஏ.ஜோஷி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா சார்பில் அம்மாநில நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் தற்காலிக உறுப்பினராக இருப்பார் என்றும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்காற்றுக் குழுவின் தலைமையிடம் பெங்களூருவில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here