ஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை! இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை!!

மெல்போர்ன்: கேரளாவைச்சேர்ந்த பெண் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மெல்போர்ன் நகரில் கணவரை கொன்றார்.
2ஆண்டுகள் விசாரணைக்குப்பின் அவருக்கு 22ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது ஆஸ்திரேலியா நீதிமன்றம்.கேரளாவை சேர்ந்த சோபியா. இவரது கணவர் ஆப்ரஹாம். இருவரும் மெல்போர்ன் நகரில் வசித்துவந்தனர்.
கல்லூரியில் படிக்கும் போது சோபியாவுக்கும் அருண் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.இருப்பினும், குடும்பத்தினரின் விருப்பப்படி ஆப்ரஹாமை திருமணம் செய்துகொண்டார் சோபியா.
இவர் ஆஸ்திரேலியா வந்தபின் 3ஆண்டுகள் கழித்து அருணும் மெல்போர்னில் வேலை கிடைத்தது.
காதலர்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டனர். இருவரும் சேர்ந்து ஆப்ரஹாமை தீர்த்து கட்டுவதென்றும், சோபியாவின் மகனை கேரளாவில் உள்ள குடும்பத்தினரிடம் ஒப்படைத்து வளர்க்க வேண்டும் என்றும் திட்டமிட்டனர்.அதன்படி, 2015 அக்டோபர் மாதம் மர்மமான முறையில் ஆபிரஹாம் இறந்தார்.
அவருக்கு மாரடைப்பு என்று கூறி கதறியழுதார் சோபியா. ஆனால், ஆபிரஹாம் உடையிலும், வாயிலும் நுரை தள்ளியிருந்தது.இதனால் போலீசார் அவரது உடலை பரிசோதித்தனர். அதில் ஆரஞ்சு ஜூசில் சயனைடு விஷம் கலந்து அவர் கடைசியாக சாப்பிட்டது தெரியவந்தது.
இதனை கொலைவழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வந்தனர்.
சோபியாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்துவந்தனர். அவருக்கும் அருணுக்கும் இருந்த தொடர்பு தெரியவந்தது. இருவரும் மெல்போர்ன் நகரின் பல இடங்களில் ஒன்றாக சுற்றித்திரிந்தனர். ஒருநாள் சோபியாவின் வீட்டில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது ஒரு டைரி சிக்கியது. அதில் தனது காதலை பற்றி அவர் விரிவாக எழுதியிருந்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் அவரிடம் துருவிதுருவி விசாரித்தனர். கடைசியில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.சோபியா, அருணை போலீசார் கைதுசெய்து வழக்கு தொடுத்தனர்.
அவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அருணுக்கு 27ஆண்டுகளும், சோபியாவுக்கு 22ஆண்டுகளும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here