ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவு! சரி செய்யும் பணி இன்று தொடக்கம்!!

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே 28 ஆம் தேதி தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக இயங்காத நிலையில் ஆலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான ரசாயனக் கழிவுகளில் இருந்து சனிக்கிழமை இரவு வாயு வெளியாவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது.ஆலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இந்த தகவலை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்தனர். ஆலையை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 2 மணி நேரம் அதிகாரிகள் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் ஆய்வு முடிவுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தனர்.சார் ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் கந்தக அமிலம் இருப்பு வைக்கப்பட்டுள்ள பகுதியில் லேசான கசிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, கந்தக அமிலம் வைக்கப்பட்டுள்ள கிடங்கு பகுதியில் இருந்து லேசான கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஆலைக்குள் மின்சாரம் இல்லாததால் இரவு முழுவதும் அதிகாரிகள் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். கசிவை சரிசெய்யும் பணி திங்கள்கிழமை (ஜூன் 18) காலை தொடங்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here