பழம்பெரும் இயக்குநர் முக்தா சீனிவாசன் காலமானார்!

சென்னை: பழம்பெரும் திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன்(88) காலமானார்.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமின்றி சினிமா தயாரிப்பாளர், கதை திரைக்கதை வசனகர்த்தாவாகவும், எழுத்தாளராகவும் விளங்கினார்.எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த ‘முதலாளி’ திரைப்படம் மூலம் இயக்குநராக திரையுலகில் அறிமுகமானார்.
கமலஹாசன் நடித்த நாயகன், ரஜினிகாந்த் நடித்த பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.மேலும் சிவாஜி நடிப்பில் இமயம், கீழ்வானம் சிவக்கும், ஜெயலலிதா நடித்த சூரியகாந்தி, ரஜினி நடித்த பொல்லாதவன், கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல் உள்ளிட்ட 65 படங்களை இயக்கியுள்ளார்.
சிவாஜியின் நெருங்கிய நண்பராகவும் முக்தா சீனிவாசன் திகழ்ந்தார். காங்கிரஸ் மற்றும் மூப்பனார் தொடங்கிய தமாகவில் முக்கிய பொறுப்புகளை வகித்தார்.1994இல் தமிழ்த் திரைப்படத்துறை குறித்த கலைக்களஞ்சியத்தை தமிழ் திரைப்பட வரலாறு என்ற தலைப்பில் தொகுத்துள்ளார்.
முதலாளி திரைப்படத்திற்காக தேசிய விருது, பலப்பரிட்சை – தமிழக அரசின் 1977-78க்கான சிறந்த திரைப்பட விருது, 1981-82 கீழ் வானம் சிவக்கும்’ – தமிழக அரசின் 1981-82க்கான சிறந்த திரைப்பட விருது, பரிட்சைக்கு நேரமாச்சு – தமிழக அரசின் 1981-82க்கான சிறந்த திரைப்பட இயக்குநர் விருது ஆகியவற்றை பெற்றவர் ஆவார்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் முக்தா சீனிவாசன் காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here