காங்கிரஸ் கட்சியின் ‘காலா’

பெங்களூர்:காங்கிரஸ் கட்சியின் ‘காலா’வாக செயல்பட்டு எடியூரப்பாவை ராஜினாமா செய்யும் நெருக்கடிக்கு உள்ளாக்கியவர் டி.கே.சிவக்குமார்.சித்தராமையா அமைச்சரவையில் மின் துறை அமைச்சராக பணியாற்றியவர். பெங்களூரை அடுத்த கனகபுரா இவரது சொந்த தொகுதியாகும்.காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காவிடில் கூட்டணி ஆட்சி என்ற ‘திட்டம்-பி’ஐ நடைமுறைப்படுத்தவேண்டும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஒக்கலிக சமூகத்தை சேர்ந்த டி.கே.சிவக்குமார் இதற்கான பேச்சுவார்த்தைகளில் மஜத தலைவர்களுடன் நடத்திமுடித்திருந்தார்.இந்நிலையில் காங்கிரசுக்கு எதிர்பார்த்ததை
விடவும் குறைவான இடங்களே கிடைத்ததால் முதல்வர் பதவியையே விட்டுக் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. எடியூரப்பா முதல்வர் பொறுப்பேற்பார் என்றதுமே காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டார் டி.கே.சிவக்குமார்.அனைத்து எம்.எல்.ஏ.க்களின் செல்போன்களும் அணைத்துவைக்கப்பட்டன. அதேநேரம் அனைத்து எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கும் அவர்கள் பத்திரமாக உள்ள தகவல் அளிக்கப்பட்டது.எந்த மிரட்டல் வந்தாலும் பயப்படவேண்டாம். அனைத்து அழைப்புகளையும் ரிக்கார்ட் செய்யுங்கள். மீடியாவை உடனே அணுகுங்கள் என்றும் டிப்ஸ் தரப்பட்டது. எடியூரப்பா முதல்வரானதும் கர்நாடகா தங்களுக்கு பாதுகாப்பனது இல்லை என்ற முடிவுக்கு வந்தார் சிவக்குமார்.கேரளமுதல்வர் தரப்பில் இருந்து அழைப்பு வந்ததும் கொச்சி செல்வதாக திட்டமிட்டு விமானத்தின் அனைத்து இருக்கைகளும் புக் செய்யப்பட்டன. ஆனால், மத்திய அரசு நெருக்கடி மற்றும் வானிலையால் கேரளா திட்டம் கைவிடப்பட்டு புதியதிட்டம் தீட்டப்பட்டது. பாண்டிச்சேரி என்று முடிவானதும் அங்குள்ள கவர்னரால் பிரச்னைகள்
ஏற்படலாம் என கருதி ஹைதராபாத் என்று பயணம் திரும்பியது.கடைசிவரை எந்தப்பக்கம் என்று தெரியாமல் இருந்த ஆனந்த்சிங், பிரதாப்கவுடா பாட்டிலை டெல்லிவரை துரத்திச்சென்று தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார் டி.கே.சிவக்குமார். எடியூரப்பா பேசும்போது எம்.எல்.ஏ.க்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டு குடும்பத்தினருடன் கூட பேசமுடியாத அராஜகம் நடந்தது என்று குறிப்பிட்டார். அதனை சிரித்தபடியே ரசித்துக்கொண்டிருந்தார் சிவக்குமார்.எம்.எல்.ஏ.க்கள் பதவிப்பிரமாணம் நடந்துகொண்டிருக்கும் வேளையில், நிச்சயம் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறினார் சிவக்குமார். அதன்படியே எடியூரப்பாவும் ராஜினாமா செய்தார். 2002ல் மகாராஷ்டிராவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு, 2017 ராஜ்யசபா தேர்தலில் குஜராத் காங்கிரஸ்
எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது என்று டி.கே.சிவக்குமாருக்கு காங்கிரசில் புகழ் ஓங்கிவருகிறது. எடியூரப்பாவை ராஜினாமா செய்யவைத்ததில் வேங்கைமகனாக ஒத்தையில் நின்று இவர் வெற்றிபெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here