அதிமுகவும், பாஜகவும் இரட்டைக்குழல் துப்பாக்கியாம்!

சென்னை:அதிமுகவும், பாஜகவும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்படுவதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி வாரியம் அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.அப்போராட்டத்தை விமர்சித்து புரட்சித்தலைவி நமது அம்மா நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்பதில் உறுதியான நம்பிக்கையோடு பாஜகவும், அதிமுகவும் உள்ளன.

இதுதொடர்பாக இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து பொறுப்புடன் செயல்பட்டு, இறுதி முடிவினை எட்டிக் கொண்டிருக்கிறது.
எங்கே இருவரும் ஒற்றுமையாக இருந்து காவிரி பிரச்னையில் வெற்றி அடைந்துவிடுவார்களோ? என்ற அச்சம் கொண்டிருக்கும் திமுக, தேவையற்ற போராட்டங்களை நடத்தி வருகிறது.
எத்தனைப் போராட்டங்கள் நடத்தினாலும் அதிமுக. – பாஜக உறவை யாராலும் பிரிக்க முடியாது.மத்திய – மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர் குலைக்க முடியாது.
இந்த உறவைக் கெடுக்க நினைக்கும் திமுகவின் திட்டம் பலிக்காது.
இந்திய அரசியலில் அதிமுகவும், பாஜகவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது. பயணத் திட்டத்தை 2 கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயம் ஆகும். இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.சமீபத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டுள்ளன என்று செய்திகள் வெளியாகிய நிலையில், பாஜகவுடன் இணைந்து செயல்பட அதிமுக தயாராகவே உள்ளது என பச்சைக்கொடி காட்டும்வகையில் இக்கட்டுரை உள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here