இபிஎஸ், ஓபிஎஸ் பதவிக்கு ஆபத்து?!

சென்னை:ஓபிஎஸ், ஈபிஎஸ் பற்றிய முக்கிய ஆதாரங்களை சனிக்கிழமை வெளியிடவுள்ளதாக அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக, மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவரளித்த பேட்டி விபரம்:
நான் எம்ஜிஆர் காலத்திலிருந்து கட்சியில் இருப்பவன், எனக்குப் பிறகு அதிமுகவுக்கு வந்தவர்கள் தான் இந்த இருவரும். அவர்கள் எம்ஜிஆருடன் ஒரு புகைப்படம் எடுத்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்.

எந்த இடத்தில் நான் கட்சியின் கொள்கைகளையும் கோட்பாட்டையும் மீறினேன் என்று அவர்கள் விளக்கவேண்டும்.
அதிமுகவின் பதவித் திருத்தங்களையே தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை, அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளரும் இல்லை, ஈபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளரும் இல்லை.
அப்படி இருக்கும் போது அவர்கள் எப்படி என்னை நீக்க முடியும்.
நான் ஆதாரத்தை பத்திரிகையாளர் முன்பு நாளை வெளியிடுவேன்.

நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தால் அது காவிரி நீரை பெற்றுத்தர சாதகமாக இருக்கும் என்றுதான் நான் விவாத நிகழ்ச்சியில் பேசினேன்.
ஜெயலலிதா காவிரி நீருக்காக உண்ணாவிரதம் இருந்து உரிமையை பெற்றுத்தந்தவர். ஆனால் இவர்கள் இருவரும் என்ன செய்தார்கள்?

ஓபிஎஸ்-க்கு வேண்டுமானால் மோடியிடம் பயம் இருக்கலாம்.
ஏனெனில் அவர் மீது பல ஊழல் வழக்குகள் இருக்கலாம்.
ஆனால் எனக்கு அதுபோல் பயமில்லை.

சசிகலாவை எதிர்த்து நான்தான் முதன் முதலில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தவன்.
அன்று சசிகலாவிடம் கையைக் கட்டிக்கொண்டு காலில் விழுந்தவர் ஓபிஎஸ்.
இவ்வாறு கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here