ராஜிவ் கொலையில் கைதாகியுள்ளவர்கள் விடுதலை எப்போது?

சென்னை: ராஜிவ்காந்தி கொலையில் கைதாகியுள்ள 7பேரும் உடனடியாக விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

சாந்தன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கு தண்டனை 2014-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
2014-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மனுதாக்கல் செய்தது. இதை ஏற்று தமிழக அரசின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.இவ்வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு சிபிஐ விசாரித்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தது.இதனைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. இவ்விஷயத்தில் 3 மாதங்களுக்குள் முடிவெடுங்கள் என்று நீதிமன்றம் 2016லேயே மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராகுல்காந்தி, தனது தந்தையை கொலை செய்தவர்களை மன்னித்துவிட்டேன் என தெரிவித்துள்ளார். பிரபாகரன் குடும்பத்தினர் அனுபவித்த வலியை நாங்களும் அனுபவித்துள்ளோம் என்று கண்கலங்க தெரிவித்தார்.

ராஜிவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தபோது ராகுலிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது கொலையாளிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவிப்பது இந்திய அரசின் முடிவு என்று தெரிவித்திருந்தார்.தற்போது அவர் மன்னித்துள்ளதாக வெளிப்படையாக அறிவித்துள்ளதால் சிறையில் உள்ள 7பேரும் உடனடியாக விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்திடம் தமிழக அரசு முறையிடவேண்டும்.
சட்டத்தில் இடமிருந்தால்தான் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here