ரஜினிகாந்தின் எம்ஜிஆர் நினைவுகள்!

சென்னை: எம்ஜிஆருக்கும் தனக்குமான நெருக்கத்தை முதன்முறையாக தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் சிலை திறப்புவிழாவில் அவர் பேசியதாவது:எம்ஜிஆரை 1973ல் முதன்முதலாக பார்த்தேன். சினிமா இன்ஸ்டிடியூட்டுக்கு அவர் காரில்வந்த போது பார்த்தேன். ஜொலிக்கும் அழகுமுகம் கொண்ட இவருக்கு எப்படி சந்திரன் என்று பெயர் வைத்தார்கள் என்று அதிசயித்தேன்.
1975ல் மூன்றுமுடிச்சு படப்பிடிப்பு நடக்கும் அரங்கில் வைத்து பார்த்தேன்.

1978ல் உடல்நலம் குன்றி விஜயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அவ்வப்போது எம்ஜிஆர் என் உடல்நலம் பற்றி விசாரித்ததாக கூறினார்கள்.
சிகிச்சை முடிந்து அவரை ஒருநாள் வீட்டில் சந்தித்தேன்.
நடிகர்களுக்கு உடம்புதான் மூலதனம். உடம்பை நன்றாக பார்த்துக்கொள். சண்டைக்காட்சிகளில் அதிகம் ரிஸ்க் எடுக்காதே என்றார்.
சீக்கிரம் கல்யாணம் செய்துகொள் என்று அறிவுரை கூறினார்.லதாவை திருமணம் செய்யவுள்ளேன் என்று அவரிடம்தான் முதன்முதலில் கூறினேன்.
லதா குடும்பத்தினர் எனக்கு பெண் தர தயங்கினர். இவ்விபரம் எம்.ஜிஆருக்கு தெரியவந்தது. அவர் லதாவின் உறவினர் ஒய்ஜிபி-இடம் பேசி திருமணத்துக்கு சம்மதம் வாங்கித்தந்தார்.
நல்ல பையன். கொஞ்சம் கோபக்காரன். பெண்ணைக்கொடுங்கள். நன்றாக வைத்து காப்பாற்றுவான் என்று குடும்பத்தினரிடம் என்னைக்குறித்து பேசியுள்ளார் எம்ஜிஆர்.

1994ல் ராகவேந்திரா திருமண மண்டபம் கட்டும்பணியில் தாமதம் ஆனது அவரை சந்தித்தேன். நான்கே நாட்களில் மண்டபம் கட்டும் பணிக்கான உரிமத்தை பெறச்செய்தார்.
எனது இன்றைய சந்தோஷமான வாழ்க்கைக்கு அவரே காரணம்.
சினிமாவில் நடிப்பில் இமயம் என போற்றப்பட்ட சிவாஜிகணேசனையும், அரசியலில் சாணக்கியர் என போற்றப்பட்ட கருணாநிதியையும் ஓரங்கட்டியவர் எம்ஜிஆர்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here