திருமண வீட்டில் மணமகள் மாயம்! மணமகனும் மாயமானார்!!

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண் மாயமானார். அப்பெண்ணின்  தங்கையுடன் திருமணம் செய்ய விருப்பமில்லாமல் மணமகனும் மாயமாகி உள்ளார்.

கோலார் மாவட்டம் மாலூர் பகுதியை சேர்ந்தவர் குரேஷ். இவருக்கு இன்று 28ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.  திருமணத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை மாலூர் திருமணமண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டிருந்தன.

மாலை 5 மணிவரை மணமகள் வீட்டார் மண்டபத்துக்கு வரவில்லை. பதறிப்போன திருமண வீட்டார் மணமகள் வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்தனர்.

மணமகள் திருமணத்தில் விருப்பமில்லாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டதாக தெரியவந்தது.  இதைத்தொடர்ந்து மணமகளின் சகோதரியுடன் குரேஷூக்கு திருமணம் செய்ய இரு வீட்டாரும் முன்வந்தனர். திருமண மண்டபம் மீண்டும் களைகட்டியது.

ரிசப்ஷன் நிகழ்ச்சிகள் முடிந்து இருவீட்டாரும் நிம்மதியாக தூங்க சென்றனர். ஞாயிறு காலை திருமணத்துக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்தன.

இன்று காலை மணமகன் குரேஷ் திருமண மண்டபத்தில் இருந்து மாயமாகிவிட்டார்.  தனக்கு பெண்ணை பிடிக்கவில்லை என்றும் பெரியோர்களின் வற்புறுத்தலுக்காக நிச்சய விழாவில் கலந்துகொள்ள நேர்ந்துவிட்டது என்றும் அவர் நண்பர்கள் வாயிலாக தெரிவித்துள்ளார். குரேஷ் மும்பை சென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இச்சம்பவம் திருமண மண்டபத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு வந்த பலரும் விரக்தியில் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். இதனால் மண்டபம் வெறிச்சோடி காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here