செல்லாத ரூ.1000, ரூ.500 நோட்டுகள்! சென்னை சிறையில் பைல்களாக மாறுகின்றன!

சென்னை: பணம் வாபஸ் திட்டத்தில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட 1000, 500 ரூபாய்களில் இருந்து சென்னையில் பைல்கள் தயாரிக்கப்படுகின்றன.


புழல் மத்திய சிறையில் உள்ள கைதிகள், பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை அரைத்து கூழாக்கி கோப்பு அட்டைகள் தயாரிக்கின்றனர்.
புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் ஏராளமானோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த கைதிகள் புழல் சிறைக்குள் பேக்கரி பொருட்கள், அழகு சாதனப்பொருட்கள், எழுதுபொருட்கள் உள்ளிட்டவைகளை தயாரித்து வருகின்றனர்.

கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்காக சிறை வளாகத்தில் அங்காடியும் உள்ளது.
மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை அரைத்து அதனை ஆவணங்கள் வைக்க பயன்படும் கோப்பு அட்டைகளாக (பைல் பேடு) தயாரிக்கப்பட்டு வருகின்றன.

 

இது குறித்து தமிழக சிறைத்துறை டி.ஐ.ஜி.(பொறுப்பு) ஏ. முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புழல் சிறைக்கு சுமார் 9 டன் பழைய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து வந்து உள்ளது. இதில் மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் சுமார் 1½ டன் அடங்கும்.
அந்த ரூபாய் நோட்டுகளை அரைத்து கூழாக்கி கோப்பு அட்டைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பழைய ரூபாய் மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் முதலில் கைதிகள் மூலம் துண்டு துண்டாகி வெட்டப்பட்டு, பின்னர் பெரிய தொட்டியில் போட்டு அரைத்து கூழாக்கப்படுகிறது.
அதன்பிறகு கைதிகளே அதில் இருந்து கோப்பு அட்டைகளை தயாரிக்கின்றனர். தினமும் சுமார் 1,000 கோப்பு அட்டைகள் தயாரிக்கப்படுகிறது.


இந்த பணியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட 25 முதல் 30 வரையிலான ஆயுள் தண்டனை கைதிகள் ஈடுபடுகின்றனர். இதற்காக தினமும் 8 மணி நேர வேலைக்காக அவர்களுக்கு ரூ.200 வரை கூலி கொடுக்கப்படுகிறது. இவ்வாறு சிறைத்துறை டிஐஜி தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி சமீபத்தில் விடுத்த அறிக்கையில், பழைய ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணி இன்னமும் முடியவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here