நடிகர் ரஜினியின் அரசியல் குழப்பம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிரபல வசனங்களில் ஒன்று,  வரவேண்டிய நேரத்துல சரியா வந்திடுவேன் என்பது.

அவரது அரசியல் அறிவிப்பு,  இதுதான் அரசியலில் அவர் இறங்குவதற்கான சரியான நேரம் என்பதை காட்டும் வகையில் உள்ளது.

தமிழகத்தை இயக்கிவந்த இரு பெரும் தலைவர்கள் களத்தில் இல்லை.   அரசு இயந்திரத்தை நடத்திவரும் ஆட்சியாளர்கள் மீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை.

மக்களின் எதிர்பார்ப்பு ஒன்றும், ஆட்சியாளர்களின் நடவடிக்கை வேறொன்றுமாக உள்ளது.  கடந்த ஓராண்டாக மக்களும், அரசும் சரியான தலைமையின்றி தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலைமையை மாற்ற மில்லினியல் தலைமை தமிழகத்தின் தேவையாக உள்ளது.

ஆனால், ரஜினி கோடிட்டுக்காட்டியுள்ள ஆன்மிக அரசியல் என்பது அவர் ஆன்மிகத்தில் எந்த அளவு ஈடுபாடு கொண்டுள்ளார் என்றும், அரசியலில் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளார் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

ஆன்மிகம் என்பது ஒருகொள்கை, ஒரு வழித்திட்டம். அது அனைவருக்கும் சமமானது. அனைவரையும் வளர்த்தெடுப்பது.

ஆன்மிகத்தால் வளர்த்தெடுக்கப்பட்டவர் தலைமை என்ற தகுதியை  தாமாகவே பெறுகிறார்.

அந்த தலைமை யாரையும் தன்னை தலைவன் என்று துதிபாடவேண்டுமென வலியுறுத்தாது.

மக்கள் தலைகுனியும் வரை காத்திருந்து மற்றவர்கள் சிரிப்பை அடக்க நான் வருகிறேன் என சொல்லாது.

நான் செய்ய நினைத்தேன். தலைமைக்கு வந்தேன். முடியவில்லை. பதவி விலகுகிறேன் என்று நடையைக்கட்டாது.

ஜிஎஸ்டி வரியால் நானும் பாதித்தேன் என்று நீதிமன்றத்தில் மட்டும் கிசுகிசுக்காது.

மக்களை பாதுகாக்க காவலர்கள்தான் வேண்டும். அவர்களை கண்காணிக்க கிங்மேக்கரை போன்று நானிருப்பேன் என்றும் சொல்லாது.

வாழவைத்த மக்களுக்காக ஜனநாயக ரீதியாக குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் எல்லாம் துரியோதணன் சபை பெரியோர் போன்று அமைதியாக இருந்துவிட்டு திண்ணை காலியான நேரத்தில் குரல் கொடுக்க துடிக்காது.

ஜனநாயகம் என்ற பெயரில் சொந்த நாட்டில் கொள்ளை அடிப்பதைப்போன்று  முதல்நாள் வசூல், முதல்வார வசூல் என்ற பெயரில் தனது ரசிகர்களின் பணத்தை கொள்ளையடிக்க அனுமதிக்காது.

எம்.எல்.ஏ.வுக்கு போட்டி, வார்டு கவுன்சிலர் வேண்டாம், எம்பிக்கு நேரம் வரட்டும் என்று காலக்கணக்கு எதுவும் போடாது ஆன்மிக அரசியல் தலைமை.

இதனை ரஜினிகாந்த் புரிந்துகொண்டால் ஆன்மிக அரசியல் தலைமைக்கு பொருத்தமானவராக இருப்பார்.

இல்லாவிட்டாலும் ஆன்மிக அரசியலில் அவரது தலைமைக்கு மக்கள் ஆதரவு தரலாம். ஆனால், கடவுள் அருள் இருக்கவே இருக்காது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here